Cyber Crime Book Review

23 Jan 2010
Posted by stylesen

சைபர் க்ரைம்

cyber crime book coverயுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது.

"தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."

யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும் சைபர் முன்னேற்றங்களுக்கு மனிதன் அடிமையாகி வருகின்றான். இன்டர்நெட் பயன்படுத்தும் வெகுஜென மக்களில் பலருடைய இரகசியங்கள் குறைந்த பட்சம் அரைநிர்வாணப் படுத்த படுகிறது, இதனை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனினும் பிரச்சனை என்று வரும்போது புலம்பி அழுவதில் பலன் ஏதும் இல்லை. இத்தகைய பிரச்சனைகளை ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த புத்தகம். இன்று கத்திரிக்காய் வாங்குவதில் தொடங்கி, மனிதனின் "காரக்டரை" அறிந்துகொள்வது வரை நாம் அனைவரும் நாடுவது கூகிள் சேவை, இவ்வாறு அனைத்தையும் தேடும் வசதி வந்துவிட்ட சூழ்நிலையில், நாம் நம்மை பற்றி எத்தகைய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், அசிங்கபடுவதையோ அல்லது ஏமாறுவதையோ தவிர்க்கலாம் என்பது இப்புத்தகம் நமக்கு தரும் பாடம்.

சில வருடங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் "என் புள்ள இங்கிலீஷ்ல தான் பேசுது" என்று கூறி சந்தோஷ பட்டனர், தற்போது எல்லா பெற்றோரும், "என் புள்ள இன்டர்நெட்லதான் முழுநேரமும் கெடக்குது" என்று கூறி பெருமிதம் அடைகின்றனர். இதற்கு தேவையான அத்தனை வசதிகளையும் (தனி அறை உட்பட) செய்து தருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை, எனினும் தங்கள் பிள்ளைகள் இந்த சைபர் உலகத்தில் உண்மையில் என்ன செய்கின்றனர் என்பதனை கண்காணிக்க தவறும் போது, குழந்தைகள் "தவறும்" செய்ய தொடங்குகிறார்கள். குழந்தைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க விளையும் அத்துனை பெற்றோரும் சற்று இந்த புத்தகத்தை படித்து வைத்துக்கொள்வது நல்லது.

இவ்வுலகில் உலவும் பல நுன்கருவிகளை பயன்படுத்த தெரிந்த, அனுபவம் மிகுந்த பலரும், சில நேரம் சில அறிவுரைகளை ஏற்க மறுத்து பின்பு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், அறிவுரை கூறுபவர்கள் அதற்கான சான்றுகளை கூற தவறுவதால், பிறர் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். இதனை நன்கு அறிந்தவராக செயலாற்றி இருக்கிறார் யுவகிருஷ்ணா! "இதை செய்யாதே!" என்று கூறி நிறுத்தாமல் "இப்படித்தான் ஒருத்தன் செஞ்சு மாட்டிகிட்டான்" என்று புரிய வைத்திருக்கிறார். மகராசன் படத்தில் வரும் கவுண்டமணி-செந்தில் காமெடியில், "இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தன் இருமி இருமி, நுறையீரல் வெளிய வந்து விழுந்துருச்சி" என்று பொய் சொல்லாமல், நிகழ்வுகளை உண்மையான வழக்கு ஆதாரங்களால் யுவகிருஷ்ணா விளக்கியுள்ளார். சிறிய சில் முதல், செல், கம்ப்யூட்டர் வரை எத்தகைய ஆபத்துகள் இருக்கின்றன என்பது அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

கட்டற்ற மென்பொருள் மற்றும் ஒபன் சோர்ஸ் மென்பொருள்களின் மூலம் சில பாதுகாப்பு அம்சங்களை சாதிக்க முடியும் என்பதனை கூற தவறியிருந்தாலும், எப்படி நம்மை பாதுகாப்பது என்பதனை எளிய தமிழில் ஆங்காங்கே நகைச்சுவை தூவி மிகச் சிறப்பாக யுவகிருஷ்ணா எழுதி இருக்கிறார். "சைபர் க்ரைம்" - "பூஜ்ய குற்றம்" என்று மொழிபெயர்த்த யுவகிருஷ்ணாவின் இலக்கிய ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை :)

காலத்துக்கேற்ப மாற முயலும் அனைவரும் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அருமை செய்திகள் பொதிந்த இந்த புத்தகத்தை, ஒரு கோப்பை கொட்டை வடிநீராக மாற்றி, பருக கொடுத்த கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.

விமர்சனத்துக்கு நன்றி

விமர்சனத்துக்கு நன்றி ஸ்டைல்சென்! :)