Jai Ho A. R. Rahman

07 Jan 2010
Posted by stylesen

ஜெய் ஹோ - ஏ. ஆர். ரஹ்மான்

arrahman book coverபல இளைஞர்களின் வாழ்கையில் ரோல் மாடலாக திகழும், எல்லோரையும் தன் இசையால் நெகிழ வைக்கும், அல்லா ரக்கா (ஏ. ஆர்) ரஹ்மான் பற்றிய புத்தகத்தை, சொக்கன் எழுத்தில் படித்தேன். இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்கள்.

"எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே"

"நான் என்றுமே ஒரு மாணவன்"

இந்த இரண்டு வாசகங்கள் தான், ஏ. ஆர். ரஹ்மானை புதிது புதிதாக எதனையோ இசையில் தேடி ஓட வைக்கிறது. வாயால் நிறைய பேசி செயலில் கோட்டை விடும் பல மனிதர்களை நாம் அன்றாட வாழ்கையில் பார்கிறோம், ஆனால் வாயை அதிகம் திறந்து பேசாமல், தன் இசையால் இவ்வுலகில் அனைவரையும் தலையசைக்க வைக்கும் ஒரு மாபெரும் மனிதன் ஏ. ஆர். ரஹ்மான். சிறு வயதில் "பூங்காற்றிலே" பாடலுக்காக, மூன்று ஒலி நாடாக்கள் வாங்கி அவை அழிந்து தேயும் வரை கேட்டு தீர்த்த ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து பக்தன் நான்.

நான் சிறுவனாக இருந்த போது "உனக்கு யார் மியூசிக் ரொம்ப பிடிக்கும்?" என்று யாராவது கேட்டவுடன், சிறிது நேரம் யோசித்து விட்டு, தேவாவையோ, இளையராஜாவையோ கூறிவிட்டால், நாம் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளபட மாட்டோம், எனவே, " எனக்கு ஏ. ஆர். ரஹ்மான்னா உயிரு", என்று கூறிய பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். அன்று அவர்கள் ஒரு பேச்சுக்கு அதை சொல்லி வைத்திருந்தாலும், பின்நாட்களில் நாம் கூறியது சரியே என்று ஒரு கணமாவது நினைத்திருப்பார்கள் என்பது என் உறுதியான கருத்து. அத்தகைய வசீகரம் கொண்டது ஏ. ஆர். ரஹ்மானின் இசை. நான் முதலில் ரசித்து கேட்டது ஏ. ஆர். ரஹ்மானின் இசையைத் தான். அவரது இசையில் புதுமை பொதிந்திருந்தது. அந்த முத்தான இசையின் வாயிலாக அறுவியாக கொட்டிய கவிதைகள் என்னை இன்னும் ஈர்த்தது. எனவே வைரமுத்துவை படித்தேன், என் பள்ளி பருவத்தில் வைரமுத்து எழுதிய அனைத்து புத்தகங்களையும் தேடி தேடி படித்து முடித்தேன். எனினும், எனக்கு ஒரு பெரும் வருத்தம் இருந்தது, ஏ. ஆர். ரஹ்மானை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று. இதற்கு இரண்டு காரணங்கள், முதலாவது அன்று ஏ. ஆர். ரஹ்மான் வாழ்கையை விவரிக்கும் எந்த புத்தகமும் எழுதப்படவில்லை, மற்றும் இணைய தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றால், அப்படி ஒன்று இருக்கிறதென்றே தெரியாத பருவம் அது. இரண்டாவதாக, புத்தகம் எழுதும் அளவிற்கு ஏ. ஆர். ரஹ்மான் பிரபலமாகி இருக்கவில்லை. எனினும், இன்று இந்த இரண்டு கனவுகளுமே நினைவாகி விட்டது.

என். சொக்கன் ஒரு இளையராஜா விசிரி (அவர் ட்வீட்டை பார்த்து நான் கற்றது), இவர் எப்படி ஏ. ஆர். ரஹ்மானைப் பற்றி ஓரவஞ்சனை இல்லாமல் புத்தகம் எழுதி இருப்பார்? இது புத்தகத்தை படிக்கும் முன் எனக்கு இருந்த கேள்வி. புத்தகத்தை படித்து முடித்த பின், ஏ. ஆர். ரஹ்மானின் வாழ்வை திறம்பட தமிழர்களுக்கு கூற என். சொக்கனைத் தவிற வேறு யாராலயும் முடியாது என்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன் :) நமக்கு பிடித்த ஒருவரைப் பற்றி (ஏ. ஆர். ரஹ்மான்), நமக்கு பிடித்த ஒருவர் (என். சொக்கன்) கூறுகிற பொழுது, புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாகவும், படிப்பதற்கு இனிமையாகவும் மாறிவிடுகிறது. என். சொக்கன் அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதுவதை வெறும் கடமையாக செய்வதில்லை, அதற்காக மிகவும் மெனக்கெடுகிறார், இது இந்த புத்தகத்திலும் தெளிவாக வெளிப்படுகின்றது. இதில் கூறப்பட்டிருக்கும் நுணுக்கமான, வெகுஜன ஊடகங்களில் தென்படாத சில சுவையான விஷயங்களே அதற்கு சான்று.

நான் எதிர்பார்த்த காதல் கதைகள் இங்கு பதியபடவில்லை, அதனை சுட்டிக் காட்டவும் என். சொக்கன் மறக்கவில்லை. ஆம் தன்னுடைய குடும்பத்தினரைப் பற்றிய விவரங்கள் ஊடகங்களில் வெளிவருவது ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருப்பமில்லாத ஒன்றாம், எனவே நமது மசாலா எதிர்பார்க்கும் மனதை சற்றே ஆறுதல் கூறி அமைதி படுத்துவோம்! ஆனால், இவைகளை தாண்டியும் உபயோகமான பல செய்திகள் இந்த புத்தகத்தில் இடம்பிடித்து, படிப்பவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. "Pray for me brother", மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் சமூக சேவைகளை பற்றிய குறிப்புகள் இந்த புத்தகத்தில் தென்படவில்லை.

இது ஒரு புதுமை விரும்பி, ஆராய்சியாளர், மற்றும் கடும் உழைப்பாளியின் கதை. இதனை எளிமையான நடையில் படிப்பதற்கு அளித்த என். சொக்கன் மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் பல சாதனைகள் நிகழ்த்த ஆஸ்கார் நாயகன், இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு என் ஜெய் ஹோ!