Ratan Tata book review
ரத்தன் டாடா
என்றோ ஒரு நாள் ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் இருந்து வெளியேறும் நிலைவரும்போது, அவர்கள் தொடங்கிய தொழில்களுக்கு "டாடா" காட்டி அனுப்ப வேண்டும் என்பதற்காகவே, டாடா குடும்பத்தின் முன்னோர்கள், இப்படி ஒரு பெயரை தங்கள் குடும்பப் பெயராக சேர்த்துக் கொண்டனர் போலும். ஆம், ஆங்கிலேயர்கள் துரத்தி அடிக்கப்பட்ட போது இந்திய தொழில்களின் நிலையை வலுவடைய செய்ததில் பெரும் பங்கு டாடா நிறுவனத்தையே சாரும். இது வெறும் ஒருவரால் தொடங்கி முடிவடைந்த சிறு தொழில் அல்ல. பரம்பரை பரம்பரையாக டாடா குழுமம்இயங்கி வருகின்றது, இதில் தற்போதைய தலைவரான ரத்தன் டாடாவை பற்றி விளக்குகிறது என். சொக்கன் எழுதிய இந்த நூல். ஒரு மனிதரை மட்டும் நமக்கு அறிமுகம் படுத்துவது இந்த புத்தகத்தின் நோக்கம் அல்ல, அது டாடா போன்ற சரித்திரத்தை விளக்குவதற்கு சிறந்த முறையும் அல்ல என்பதை நன்கு உணர்ந்த என். சொக்கன் இந்நிறுவனத்தின் ஒன்றரை நூற்றாண்டு வரலாற்றில் உள்ள சில முக்கியமான நிகழ்வுகளை எளிமையாக விளக்கியுள்ளார்.
புத்தகத்தை படித்து முடித்தவுடன் ஏனோ வைரமுத்துவின் இந்த வரிகள் என் மனதில் ஒலித்தது,
"கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானன்,
கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்"
தமிழர்களுக்கு ரத்தன் டாடாவின் கதை ஒன்றும் புதிதல்ல, ஏனெனில் பல ரஜினி படங்களின் கருதான் இவர் வாழ்கையும். ரஜினி ஒரு சிறு தொழிலாளியாக கம்பெனியில் சேர்ந்து அந்த கம்பெனிக்கே முதலாளி ஆவார் அல்லவா? இதனை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம், அதுதான் ரத்தன் டாடாவின் கதையும் கூட. சிலவிடங்களில் இக்கதை மாறுபடலாம், உதாரணத்திற்கு, இங்கு ஹீரோயின்கள் இல்லை, டூயட் இல்லை, ஹீரோ ஏழை இல்லை, மேலும் ரஜினி ஒரு ஐந்துநிமிட பாட்டிலேயே பெரியாளா ஆகிடுவார், ஆனால் ரத்தன் டாடாவிற்கு பற்பல வருடங்கள் பிடித்தன.
நான் கல்லூரியில் படித்தபோது பல்வேறு காரணங்களுக்காக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)ல் சேர வேண்டாம் என்ற கொள்கையுடன் இருந்தேன். அந்த காலகட்டத்திலும், TCS எங்கள் கல்லூரிக்கு வேலைக்கு ஆள் எடுக்க வந்தபோது அவர்கள் ஒளிபரப்பிய ஒரு விளம்பரத்தைக் கண்டு பலநாட்கள் வியந்திருக்கிறேன். இன்றும் எண்ணும்போது எனக்கு ஆச்சர்யமும், வியப்பும் அதிகமாகிறது. அந்த விளம்பரத்தில் ஒருவர் கடிகாரம் பார்த்து காலை எழுந்திருப்பது முதல், தேநீர் அருந்துவது, காரில் அலுவலகம் செல்வது, உணவு மற்றும் வீடு திரும்பி உறங்குவது வரை பல்வேறு டாடா தயாரிப்புகள் எவ்வாறு இந்தியர்களின் வாழ்வில் அங்கமாக விளங்குகிறது என்பதனை இரண்டு நிமிடங்களில் காண்பித்தார்கள். இதிலிருந்து டாடா மரத்தின் வேர்களும், கிளைகளும் எவ்வளவு விஸ்தாரமானது என்பது நமக்கு புலப்படும். இவ்வளவு பெரிய குழுமத்தின் இன்றைய தலைவர் ரத்தன் டாடாவைன் வாழ்கையை சிறந்த முறையில் இப்புத்தகம் விளக்குகிறது.
சிறுவயதில் இருந்து நாம் ஏதேனும் பணவிரயம் செய்தால் பலர், "ஆமாம், இவர்தான் டாடா-பிர்லா பையனாச்சே" என்று கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம், அவ்வளவு புகழ் பெற்றவர்கள் டாடாக்கள், எனினும் இந்த பிர்லா யார்? இவரை பற்றியும் என். சொக்கன் அவர்கள் இன்னொரு புத்தகம் வாயிலாக நமக்கு விளக்குவார் என்று நம்புகிறேன். சிறிய தொழில் முதல் பெரிய தொழில் வரை செய்கின்றவர்கள், மற்றும் செய்ய விரும்புவர்கள் இந்த புத்தகத்தை படிப்பது நன்மை பயக்கும். படித்த பின்பு,
"செஞ்சா டாடா மாதிரி செய்யனும்"
என்று அனைவரும் நிச்சயம் கூறுவார்கள் என்பது திண்ணம். இத்தகைய புத்தகத்தை நமக்கு அளித்த கிழக்கு பதிப்பகத்தாருக்கும், என். சொக்கன் அவர்களுக்கும் எனது நன்றி.
நன்றி
அறிமுகம் / விமர்சனத்துக்கு நன்றி!
பிர்லாபற்றியும் எழுதவேண்டும். காலம் ஒத்துழைத்தால் பார்க்கலாம் :)
- என். சொக்கன்