Vaathiyaar - M. G. R

13 Jan 2010
Posted by stylesen

வாத்யார்

mgr book coverகிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"

என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.

இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.

இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.

iruvar movie coverஏனோ தெரியவில்லை புத்தகம் படிக்கும் போது சிலநேரம் மோகன்லாலின் உருவம் என் கண்முன் தோன்றி மறைந்தது. கடந்த ஞாயிறு மாலை புத்தகத்தை படித்து முடித்த கையோடு, சென்னை சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க்கிற்கு சென்று "இருவர்" படத்தின் டிவிடி ஒன்றை வாங்கி வந்தேன். அதே நாள் இரவு படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தேன். முன்பு எத்தனையோ முறை இந்த படத்தை பார்த்த போதும், இம்முறை படத்தின் ஒவ்வொரு அசைவையும் மேலும் சிறப்பாக மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்தேன். அடுத்து கலைஞர் பற்றிய புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்தில் வாங்கி படிக்க நினைத்துள்ளேன் (ஏற்கனவே, கலைஞரை பற்றி நிறைய படித்துள்ளேன், இப்போது வேறு சில கண்ணோட்டங்களும், இதில் சேரும்). கலைஞரை படித்த பின்பும், இருவர் படத்தை மறுமுறை பார்க்க வேண்டும்! மணிரத்தினத்தின் "Masterpiece" இந்த படம் :)

புன்முறுவல் புரிந்து, வார்த்தைஜாலம் இல்லாமல் வர்ணஜாலம் புரிந்த, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வாத்யாரை பற்றிய புத்தகத்தை தந்ததற்கு கிழக்கு பதிப்பகத்தாருக்கும், ஆர். முத்துக்குமார் அவர்களுக்கும் என் நன்றி.